தொடர் மழைக்கு 17 ஏரிகள் நிம்பின நீச்சல் தெரியாத சிறுவர்கள் ஏரிகளில் இறங்கி குளிக்க வேண்டாம்

*நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியால் 17 ஏரிகள் நிரம்பின. நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் ஏரிகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் விசுவக்குடி, கொட்டரை என 2 அணைக்கட்டுகள் உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணங்களால் பரவலாக நல்லமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி, லாடபுரம் பெரிய ஏரி, நூத்தப்பூர் ஏரி, வடக்கலூர் அக்ரஹாரம் ஏரி, வெண்பாவூர் ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, கீரவாடி ஏரி, அகரம் சீகூர் ஏரி, ஒகளூர் ஏரி, குரும்பலூர் பாளையம் ஏரி, அரும்பாவூர் சின்ன ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, செஞ்சேரி ஏரி, பூலாம்பாடி பொன்னேரி, கிழுமத்தூர் ஏரி, பெருமத்தூர் ஏரி ஆகிய 17 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிகின்றன. கீழப்பெரம்பலூர் ஏரி 90 முதல் 99 சதவீதத்திற்கு நிரம்பியுள்ளது.

பெரம்பலூர் கீழஏரி, ஆய்க்குடி ஏரி, வயலூர் ஏரி, கை. பெரம்பலூர் ஏரி ஆகியன 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. பெரம்பலூர் மேல ஏரி, பாண்டகப்பாடி ஏரி, துறைமங்கலம் சின்னஏரி ஆகியன 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.கிளியூர் ஏரி, பெரியம்மாப்பாளையம் ஏரி, பெண்ணக்கோணம் ஏரி, ஆண்டி குரும்பலூர் ஏரி, பேரையூர் ஏரி, அரணாரை ஏரி, வெங்கலம் பெரிய ஏரி ஆகியன 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

எழுமூர் ஏரி, செங்குணம் ஏரி, வி.களத்தூர் சின்ன ஏரி, வெங்கனூர் ஏரி, தொண்ட மாந்துறை ஏரி, நெற்குணம் ஏரி, மேலப்புலியூர் ஏரி, லாடபுரம் சின்னஏரி, காரை பெரிய ஏரி, நாரணமங்கலம் ஏரி, வரகுபாடி ஏரி, அரசலூர் ஏரி, வி.களத்தூர் பெ ரியஏரி, கீரனூர் ஏரி, அத்தியூர் ஏரி, கீழப்புலியூர் ஏரி, பூலாம்பாடி சின்ன ஏரி ஆகியன 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. கை.களத்தூர் ஏரி, பில்லாங்குளம் ஏரி, பொம் மனப்பாடி ஏரி, காரை சின்ன ஏரி உள்ளிட்ட 24 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழாகவே நிரம்பி உள்ளன.

மழைநீரால் வேகமாக நிரம்பிவழியும் சேறு நிறைந்த ஏரிநீரில் நீச்சல் தெரியாத சிறுவர்கள் இறங்கியும், டை வடித்து குதித்தும் குளிப்பது ஆபத்தானது. பொதுமக்கள், பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஏரி நீரில் குளிக்கச் செல்லும்போது உடனிருந்து பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: