பெரம்பலூரில் கரும்பு அரவைக்கு தயாராக உள்ள சர்க்கரை ஆலை-30 சதவீத கட்டமைப்பு பணிகளை முடிக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் : பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவை துவங்கும் முன்பு மீதமுள்ள 30 சதவீத கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி ஆலை நிர்வாகத்திடம் அளித்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் இயங்கி வரும் ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையில் 2022-2023ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் 5ம்தேதி துவக்குவது என ஆலை நிர்வாகத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 130 நாட்கள் அரைப்பது எனவும், 12,000ம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3,60,000 டன் கரும்பை அறைப்பது எனவும், 9.75 சதவீத சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்த நிர்வாகம் சார்பாக முயற்சிகள் உடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் எறையூர் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பு பயிர்களில், பூஞ்சாண நோயால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் வரை கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பதிவு செய்யப்படாத கரும்பையும் (யுஆர்) எடுப்பதில் தவறு இல்லை. ஆனால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்ட கரும்புகளை மட்டுமே வெட்ட வேண்டும். பதிவு செய்யாத கரும்பை ஆலைக்கு பற்றாக்குறை ஏற்படும்போது மட்டுமே எடுக்க வேண்டும்.

ஆலையில் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் 30 சதவிகித பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். குறிப்பாக டர்பன் வேலைகளை விரைந்து முடித்து, எக்காரணத்தை கொண்டும் அரவைப் பணிகளை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நாளில் தொடங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். வருகிற 22ம் தேதியன்று ஆலை அரவைப்பணிகளுக்கான முன்னோட்டம் (டிரையல்) எடுப்பது எனவும் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரவைத் திறனை மேம்படுத்த காலியாக உள்ள இடங்களுக்கு 15 தொழிலாளர்களை நிரந்தரமாக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை 5 கிலோ கேட்டுள்ளோம் என்றாலும் 4 கிலோ வழங்குவதற்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும்.டீசல் விலை ஏற்றத்தால் கரும்பு ஏற்றும் டிராக்டர்களுக்கு டீசல் உயர்வுக்கான தொகையை உயர்த்தித் தர வேண்டும். ஆலையின் முகப்பில் இருந்து வேபிரிஜ் வரை உள்ள மோசமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் தாமரைப்பூண்டியில் இருந்து மதுராநகர் வழியாக செங்கமேடு வரை உள்ள 1.5 கி.மீ. சாலை பழுதடைந்து உள்ளது. அந்த வழியாக தாமரைப்பூண்டி கோட்ட கரும்புகள் வரும். எனவே அந்த சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும். பல இடங்களில் சாலையின் குறுக்கே கரும்பு டிராக்டர்கள், கரும்பு லாரிகளில் மோதும்படி மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் நிலையே உள்ளது.

எனவே மின்கம்பிகளை உயர்த்தி கட்டவேண்டும். 2022-2023ம் ஆண்டுக்கு 450 டிராக்டர்கள் பதிவு செய்ய வேண்டும். வே-பிரிட்ஜை கூடுதலாக அமைக்க வேண்டும். ஆலை பிரேக்டவுன் ஆனால் எடையை போட்டு எடுத்து கொண்டு கரும்பை இறக்கிக் கொண்டு டிராக்டரை காக்க வைக்காமல் அனுப்பி வைக்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய வெட்டுக்கூலி முன்பணத்தை (அட்வான்ஸ்) ஆலை நிர்வாகம் விரைந்து வழங்கிட வேண்டும் என பெரம்பலூர் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி அளித்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: