×

வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி கண்மாய்க்கு வைகை கால்வாய் தண்ணீரை கொண்டு வர வேண்டும்-கிராமத்தினர் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே வறண்ட கண்மாய்க்கு வைகையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு அருகே உள்ளது விராலிப்பட்டி கிராமம். இங்கு பிரசித்திபெற்ற கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. அந்த கோவிலருகே பெரிய கண்மாய் வறண்ட நிலையில் உள்ளது.

மழை காலங்களில் ஓரளவு தண்ணீர் போதுமானதாக இருந்தாலும் வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் தடைபடுகிறது. நல்ல விவசாய நிலங்கள் தரிசாக மாறுகிறது. சமயத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுகிறது. 4 கி.மீ தூரத்தில் பழைய வத்தலக்குண்டுவில் மஞ்சளாறு தண்ணீர் வந்து அங்குள்ள 2 கண்மாய்கள் நிரம்புகிறத. 8 கி.மீ தூரத்திலுள்ள குள்ளப்புரம் கண்மாய் சோத்துப் பாறை அணை தண்ணீர் வந்து நிரம்புகிறது. 3 கி.மீ தூரத்தில் வைகையாறு செல்கிறது.

அதன் அருகிலேயே வைகை அணையிலிருந்து கள்ளந்திரி செல்லும் சிமிண்ட் கால்வாயில் வைகை தண்ணீர் செல்கிறது. இப்படி சுற்றியே வைகை தண்ணீர், மஞ்சளாறு தண்ணீர், சோத்துப் பாறை தண்ணீர் வந்து பயன்படும் நிலையில் விராலிப்பட்டி மட்டும் குட்டி பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதனால் ஊரில் உள்ள பல விவசாயிகள் கூலி வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு வேலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

தண்ணீர் இல்லாததால் சொந்த நிலத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு செல்லும் விவசாயிகள் தங்கள் ஊர் கண்மாய்க்கு அருகிலுள்ள பூவம்பட்டி கிராமத்திலிருந்து வைகை கால்வாய் தண்ணீரை விராலிப்பட்டி கண்மாய்க்கு கொண்டுவர வேண்டும் என்று பத்து ஆண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.உயர் அதிகாரிகளும் நியாயமான கோரிக்கை எளிதில் செயல்படுத்தி விடலாம் என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

விவசாயிகள் மதுரைக்கு நேராகச் சென்று உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இத்திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் இனியும் காலந்தாழ்த்தாமல்திட்ட பணியை துவக்கி விராலிப்பட்டி மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaigai Canal ,Viralipatti Kammai ,Vathalakkund—villagers , Vathalakundu: Villagers demand that water be brought from Vaigai to the dry Kanmai near Vathalakundu.
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை