சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாநில கமிஷன் தலைவர் பேட்டி

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கமிஷன் தலைவர் கூறினார்.  

சித்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஆந்திர மாநில எஸ்சி, எஸ்டி கமிஷன் சேர்மன் விக்டர் பிரசாத் நேற்று வருகை தந்தார். அவருக்கு சங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்களின் நிலங்களை உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன. அதன் மீது தனி கவனம் செலுத்தி எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். மாநில அரசு அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருகிறது.

 இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சித்தூர் மாவட்டத்தில் ஏராளமான எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்கள் நிலங்களை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து அதில் இலவச வீட்டு மனை பட்டா அமைத்து வருவதாக புகார்கள் வந்தன. அவ்வாறு எஸ்சி எஸ்டி மக்களின் நிலங்களில் அரசு ஆக்கிரமிப்பு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால் அதன் மீது தனி கவனம் செலுத்தி எஸ்சி எஸ்டி மக்களின் நிலங்களை அவர்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கிராமப்புறங்களில் 50 சென்ட், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என நிலங்களில் விவசாயம் செய்து வரும் எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்களின் நிலங்களை உயர்வகுப்பை சேர்ந்தவர்கள் பெயருக்கு பட்டா செய்து கொண்டு வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சித்தூர் மாவட்டத்தில் ஏராளமான எஸ்டி வகுப்பை சேர்ந்த மலைவாழ் மக்கள் வனப்பகுதி ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அவர்கள் விவசாயம் செய்யும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன.

அதன் மீது தனி கவனம் செலுத்தி மலைவாழ் மக்களுக்கு அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களை வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், கமிட்டி உறுப்பினர்கள் ராஜ்குமார், பாபு, முரளி, பிரசாத் உள்பட ஏராளமான எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: