×

சார்ஜா சர்வதேச கண்காட்சியில் தமிழ் கவிதை தொகுப்பு வெளியீடு

சென்னை: சார்ஜா சர்வதேச கண்காட்சியில் தமிழ் கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய புயலோடு போராடும் பூக்கள் என்ற கவிதை நூல் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில்  வெளியிடப்பட்டது. தொடர்ந்து 41 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்புத்தக கண்காட்சியில் இவ்வாண்டு 81 நாடுகள் பங்கேற்துள்ளன. 1400-க்கும் அதிகமான அரங்குகளை உலக முழுமைக்குமான பதிப்பகங்கள் அமைத்துள்ளன.

இது உலகின் இரண்டாவது சர்வதேச  பெரிய புத்தக சந்தையாகும். அங்கு நடைபெற்ற அரங்க நிகழ்வில் இந்நூலை தமிழ் மையம் தலைவர் திரு.ஜெகத் கஸ்பர் வெளியிட, தொழிலதிபர் M.சுல்தானுல் ஆரிப் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, ஆரிஃபா குழும தலைவர் M.சுல்தானுல் ஆரிபின், 89.4 FM RJ அரூன், அதீப் குழும தலைவர் டாக்டர் அன்சாரி, அபுதாபி சாகுல் ஆகியோர் அடுத்தடுத்த பிரதிகளை பெற்றுக் கொண்டனர். அரங்கில் பங்கேற்றவர்களுக்கு மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலில் கையெழுத்திட்டு வழங்கினார்.

மிக சிறிய அரங்குகளில் 30 நிமிடங்கள் மட்டுமே நிகழும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளில், தமிழ் நிகழ்ச்சிகளில் இதுவே அதிகமானோர் பங்கேற்ற நிகழ்ச்சி என விழா குழுவினர் பாராட்டினர். போக்குவரத்து நெருக்கடியை கடந்து தாமதமாக வந்தவர்கள், அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு மணி நேரம் தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு அனைவருக்கும்  நூல்களை வழங்கினார். தமிழக மக்கள் மட்டுமின்றி, கேரள மக்களும் அவரை பார்த்ததும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பிறகு ஊடகங்களுக்கும் அவர் பேட்டியளித்தார். இந்நிகழ்வில் மஜக நண்பர்கள் முன் முயற்சியில் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அன்பை விதைப்போம் என்ற பாடல் ஒலி-ஒளிப் பேழையும் வெளியிடப்பட்டது. தோப்புத்துறை ரியாஸ் அவர்களின் ஆக்கத்தில் வெளியிடப்பட்ட இதனை மு.தமிமுன் அன்சாரி வெளியிட, டெபா குழும தலைவர் பால் பிரபாகரன், சமூக ஆர்வலர் பொன் மைதீன் பிச்சை, இந்திய சமூக மைய தலைவர் அல் அய்ன் முஸ்தபா முபாரக், ஷார்ஜா தொலைக்காட்சியின் கிராபிக்ஸ் தலைமை அதிகாரி சிராஜ், ஈமான் பொதுச்செயலாளர்  ஹமீது யாசீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வுக்கு டாக்டர் A.அசாலி அகமது தலைமை தாங்கினார். மதுக்கூர் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார். மனிதநேய கலாச்சாரப் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், அபுல் ஹஸன், ஜியாவுல் ஹக், அப்துல் ரெஜாக், பயாஸ், ரசூல், ஹக்கீம், சாகுல், கீழக்கரை செய்யது இப்ராஹிம்  ஆகியோருடன், மஜக மாநில துணைச் செயலாளர் அஸாருதீன், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி. ஜெய்னுதீன், கோவை மாநகர மஜக செயலாளர் அப்பாஸ், கோவை மாநகர மாவட்ட துணைச் செயலாளர்  சிங்கை சுலைமான் ஆகியோரும் அரங்கப் பணிகளை  ஒருங்கிணைத்தனர்.

Tags : Sharjah ,International Exhibition , Publication of Tamil poetry collection at Sharjah International Exhibition
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!