×

அசைவப்பிரியர்கள் அதிகளவில் திரண்டனர் வேலூர் மீன்மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது

வேலூர் :  வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அசைவப்பிரியர்கள் அதிகளவில் திரண்டதால், மீன்கள் விற்பனை களைகட்டியது.வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை ஆகும். காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.
கடந்த வாரம் கந்த சஷ்டி என்பதால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விற்பனை ஜோராக இருந்தது. இதேபோல் கோழி, ஆட்டுக்கறி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் விற்பனை அதிகரித்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: புரட்டாசி மாதம், கந்தசஷ்டி முடிந்து, மீன் மார்க்கெட்டில் நேற்று விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகளவிலான மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலையும் குறைந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ₹1,400, சிறிய வஞ்சிரம் கிலோ ₹300க்கும் விற்றது. இறால் கிலோ ₹400 வரையும், நண்டு கிலோ ₹400 முதல் ₹500 வரையும் விற்றது.  

கட்லா கிலோ ₹160, மத்தி ₹120, சங்கரா கிலோ ₹350, ஜிலேபி கிலோ ₹80 முதல் ₹100 வரையும், ஷீலா கிலோ ₹600 வரையும், கடல் வவ்வால் கிலோ ₹600, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் கிலோ ₹140 முதல் ₹180 வரையும் விற்றது. இதனால் அசைவ பிரியர்கள் அதிகளவில் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore , Vellore: Due to large number of non-vegetarians gathered in the Vellore fish market on Sunday, the sale of fish
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...