மலையப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோபி : கோபி அருகே உள்ள நம்பியூர் மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியானது கடந்த 45 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய கிராமப்பகுதியான இங்கு மலையப்பாளையம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இதில் கடந்த 1996- 97ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த 64 மாணவர்களும் முதன் முறையாக அனைவரும் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆசிரியர்களை கவுரவிக்கவும்,பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கவும் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 4 மாத காலமாக வெவ்வேறு ஊர்களில் வேலை செய்து வரும் 64 மாணவ, மாணவிகளும் கண்டறியப்பட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நவீன இயந்திரம் வழங்க முடிவு செய்தனர். ரூ.5 லட்சம் மதிப்பில் கடந்த சில நாட்களாக நவீன சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவும் பணி நடைபெற்று தற்போது முடிவுற்றது.

இந்நிலையில் நேற்று அனைத்து மாணவ, மாணவிகளும் ஒன்றிணைந்து வெள்ளி விழா சங்கமம் என்ற பெயரில் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.இதில் ஓய்வு பெற்ற தங்களது ஆசிரியர்களை அழைத்து வந்து மரியாதை செலுத்திய மாணவ, மாணவிகள் தங்களது பணி மற்றும் குடும்ப விபரங்களை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் வேலுச்சாமி, முன்னாள் ஆசிரியர் ராமலிங்கம், பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் ராமலிங்கம் கூறுகையில், ஒவ்வொரு பள்ளியிலும் இது போன்ற தேவைகள் உள்ளது. ஒவ்வொரு தேவைக்கும் அரசை எதிர்பார்க்காமல் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்  போன்று ஒவ்வொரு பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 லட்சம் ரூபாய்க்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், கலையரங்கிற்கு பேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவரும் அத்திகடவு அவினாசி திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம்,பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் ருத்ரமூர்த்தி, உமாமகேசுவரி, மலர்ச்செல்வி, பத்மா, ஆறுமுகம் உள்ளிட்டோரும், தறபோதை ஆசிரியர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: