களியக்காவிளை பஸ் நிலையத்தில் இடநெருக்கடி விரிவாக்க பணிகள் தொடங்கப்படுமா?

களியக்காவிளை : கன்னியாகுமரி- கேரள எல்லையில் அமைந்துள்ளது களியக்காவிளை பஸ் நிலையம். இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி தமிழக கிராமங்களில் இருந்து கேரள பகுதிகளுக்கும், கேரள கிராமங்களை சேர்ந்த பயணிகள் தமிழக பகுதிகளுக்கும் தினமும் வந்து செல்கின்றனர். அதோடு குமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் திருவனந்தபுரம் மற்றும் நெய்யாற்றின்கரையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகளுக்காக சென்று வருகின்றனர். இதனால் களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட் எப்போதும் நெருக்கடி மிகுந்த நிலையில் காணப்படுவது வழக்கம்.

 மேலும் பஸ் ஸ்டாண்டை ஒட்டி சந்தை செயல்பட்டு வருவதால்,  மக்களின் நெரிசலும் வாகனங்களின் நெரிசலும் எப்போதும் காணப்படும்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் துவக்க விழா களியக்காவிளையில் நடந்தது. அப்போதைய கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை துவக்கி வைத்தனர். அதிகாரிகளின் திட்டப்படி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கான நில ஆர்ஜித பணிகள் துவங்கின. அப்போது சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகு தான், சந்தை பகுதியை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.  

வியாபாரிகள் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், சந்தை வியாபாரிகளின் நலன் கருதி கட்டிடம் கட்டும் பணியை முதலில் துவங்க நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சிறப்பு நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சந்தை வியாபாரத்திற்கென கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. இதற்கிடையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டாண்டில் இருந்த வெயிட்டிங் ஷெட் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. சந்தை வியாபாரத்திற்கென புது கட்டடம் கட்டும் பணி நடந்து வந்ததாலும், வெயிட்டிங் ஷெட் இடிக்கப்பட்டதாலும் ,விரைவில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்தது. ஆனால் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் துவக்கப்படவில்லை.

இதையடுத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை  விரைவில் துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வையும், சம்பள உயர்வையும்  காரணம் காட்டி ஒப்பந்ததாரர் தரப்பில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. நிலைமைகளை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் என மதிப்பீடு செய்து பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக நிதியை ஒதுக்கியது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சந்தை கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், சந்தையை அக்கட்டடத்தில் மாற்றி விட்டு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் விரைவில் துவங்கும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட் பகுதியை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

தாறுமாறாக நிறுத்தப்படும் அரசு பஸ்கள்

களியக்காவிளை பஸ் ஸ்டாண்ட்டில் 60க்கும் மேற்பட்ட தமிழக பஸ்களும் 40க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்களும் தினமும் வந்து செல்கின்றன. பூவாறு, பொழியூர், காட்டாக்கடை , வெள்ளறட, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கேரள அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. கன்னியாகுமரி, நாகர்கோவில், திட்டுவிளை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசு பஸ்களும் வந்து செல்கின்றன.

சென்னை, பெங்களூரு, கோவை,  எர்ணாகுளம், கொல்லம், வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் அதிக நேரம் பயணித்து வரும் பயணிகளுக்கோ, போக்குவரத்து தொழிலாளர்களுக்கோ போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே அவசரமாக வரும் பஸ் டிரைவர்கள் பஸ்களை ஒழுங்கு படுத்தி நிறுத்தும் வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு டிரைவர்கள் இறங்கி செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை தொடர்கதையாக உள்ளது.

ஒழுகும் டைம் கீப்பர் அலுவலகம்

இரு மாநில பயணிகளுக்கு உதவும் வகையில் எந்த ஏற்பாடும் செய்யப்பட வில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய டைம் கீப்பர் அலுவலகம், தற்காலிக பஸ் நிறுத்த நிழலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. மழை நேரத்தில் அந்த அலுவலகத்தில் இருந்து பணி செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

Related Stories: