குமரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அறிவிப்பு-பொதுமக்களுக்கு அமைச்சர், கலெக்டர் வேண்டுகோள்

நாகர்கோவில் : குமரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் வலியுறுத்துள்ளார்.ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன்படி  பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் உணவுப் பொருள் கோப்பைகள், டம்ளர்கள், தெர்மாகோல் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும் விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், நீர் நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் மாசு இல்லா கன்னியாகுமரி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. ஆய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடம் நடவடிக்கையால் 90சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

குமரி மாவட்டத்தை குப்பை இல்லா குமரி என்பதை மக்கள் இயக்கமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் பல்வேறு கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.  மாநகராட்சி பகுதியில் உள்ள வலம்புரிவிளையில் தேங்கியுள்ள குப்பைகளை ரூ.10 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகிறது.

விரைவில் இந்த பணிகள் முடியும்.‌ ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வுக்கூட்டத்தில் மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், எஸ்பி ஹரிஹிரன் பிரசாத், வன அதிகாரி இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

கலெக்டர் அரவிந்த் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களின் முழு பங்களிப்புடன், வீடுகளிலிருந்து பெறப்படும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே குழாய் மூலம் உரமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை தந்து, உங்கள் பகுதிகளை மாசில்லா பகுதிகளாக மாற்றிட கேட்டுக்கொள்கிறேன்.

பிளாஸ்டிக் பொருட்கள்  பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் அனைவருக்கும் அது பிரச்னையாக மாறும் என அனைவரும் உணர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் அனைவர் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Related Stories: