திருக்கார்த்திகையை வரவேற்க தீப விளக்குகள் தயாரிக்கும் பணி திண்டுக்கல்லில் ஜரூர்

திண்டுக்கல் : கார்த்திகை தினத்தை முன்னிட்டு தீப விளக்குகள் தயாரிக்கும் பணி திண்டுக்கல் பகுதியில் மும்முரமாக நடைபெறுகிறது.கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தீபத்திருநாளாக திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள், வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். தீபம் ஏற்றுவதால் செல்வம் பெருகி, தீபம் சுடர் விட்டு எரிவது போல் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

டிசம்பர் மாதம் 6ம் தேதி திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் திண்டுக்கல் பகுதியில் பல்வேறு விதவிதமான விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அடுத்துள்ள நொச்சியோடைப்பட்டியில் கஜேந்திரன் என்பவர் களிமண்ணில் விநாயகர், யானைமுகம், மயில், சிவலிங்கம், லெட்சுமி உள்ளிட்ட வடிவங்களில் விளக்குகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இங்கு சங்கு சக்கரம், அரச இலை, ஒரு முகம், ஐந்து முகம் உள்ளிட்ட விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.மண் விளக்கு தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், ‘‘வருடம் முழுவதும் சீசனுக்கு தகுந்தவாறு களிமண் பொருட்கள் செய்து வருகிறோம். தற்போது திருகார்த்திகைக்காக அகல் விளக்கு அதிகளவு தயாரித்துள்ளோம். அடுக்கு விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

 ரூ.1 முதல் ரூ.400 வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். 5 முதல் 21 விளக்குகள் கொண்ட அடுக்கு விளக்குகள், லெட்சுமி விநாயகர் விளக்கு, விசிறி விளக்குகள், லிங்க விளக்கு இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளோம். 2 வருடங்கள் கொரோ னா தொற்று காலத்தில் விளக்குகள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: