திருப்பதிக்கு பேருந்தில் சென்றபோது சிறுநீர் கழிக்க சென்ற சென்னை வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: திருப்பதிக்கு பேருந்தில் சென்றபோது, சிறுநீர் கழிக்க பேருந்தில் இருந்து இறங்கிய சென்னை வாலிபரை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில்,  சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது.

இதன் அருகே வாலிபர் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு நேற்று  தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், பாடுகாயங்களுடன் கிடந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.  

விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்பதும், நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு பேருந்தில் பயணம் செய்த போது தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் உணவு சாப்பிட பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக சிறிது தூரம் சென்றபோது அங்கு இருந்த 3 பேர் கட்டையாலும், கையாலும் பலமாக தாக்கி, இவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.3800 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது.

தலையில் ஏற்பட்ட பயங்கர தாக்குதலால் 8 தையல் போடப்பட்டுள்ளது. இவர்  எங்கே வேலை செய்கிறார்.  யாருடன் வந்தார். எதற்காக தனியாக சென்றார் போன்ற எந்த விவரங்களை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: