வடசென்னை பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

தண்டையார்பேட்டை: ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த 6 மாத காலத்தில் சென்னையில் பெருமளவு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களிலும், நீர்வழி கால்வாய்களிலும் வண்டல்களை அகற்றி, தூர்வாரும் பணி பல்வேறு நிலைகளில் கண்காணிப்பு அலுவலர்கள் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. இதன், கடந்த சில நாட்களாக காரணமாக அதிகளவு மழை பெய்தும் மாநகரின் பிரதான பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லை.

தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தீவிர முயற்சியால் சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில், புது வண்ணாரப்பேட்டை காமராஜர் சாலை, ஏ.இ கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் எவ்வாறு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சாலைகளில் குப்பை தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி நான்காவது மண்டல பொறுப்பு அதிகாரி வினை, 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதேபோல், திருவொற்றியூர், கொரட்டூர், மாதவரம், பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

Related Stories: