×

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கியோர் பட்டியல் தயாரிப்பு: போலீஸ் தீவிர கண்காணிப்பு

கோவை: கோவை கார் வெடிப்பு எதிரொலியாக ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கியவர்கள் யார்? யார்? என போலீசார் கண்காணித்து பட்டியலை திரட்டி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் வெடித்ததில் ஜமேஷா முபின் பலியானார். இதைத்தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

முபின் வீட்டில் டிரம்மில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை ஜமேஷா முபின் மற்றும் கைதான அவரது கூட்டாளிகள் ஆன்லைன் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கோவையில் யாரெல்லாம் ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கியுள்ளனர் என்பது குறித்த விவரங்களை சேகரித்து பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது போன்ற வெடி மருந்துகள் ஆன்லைனில் கிடைப்பதை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் கடைக்கு செல்லும் நேர விரயத்தை குறைக்க பலர் ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர்.
அதில், சிறிய பொருட்கள் முதல் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் கிடைக்கின்றன.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாளில் தங்களது கைகளுக்கு கிடைத்து விடுகின்றன. தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திட்டம் தீட்டியவர்கள் சில மாதங்களாகவே ஆன்லைனில் கிலோ கணக்கில் வெடிபொருட்களை ஆர்டர் செய்து பெற்றுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் எளிதாக கிடைப்பது வேதனைக்குரியது. பட்டாசு தொழிற்சாலை மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வேதி மருந்துகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன.

இவற்றை வாங்கி ஒருங்கிணைத்து சதி திட்டம் தீட்டுபவர்கள் வெடிபொருட்களாக மாற்றுவதாக அறிய முடிகிறது. எனவே, பிரபல ஆன்லைன் தளங்கள் இது போன்ற வேதி பொருட்களை விற்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இதனை தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் உடனே எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Coimbatore Car, Blast Incident, Explosives, List, Preparation, Police Vigilance, Surveillance
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8...