நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேந்தமங்கலம்: நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டைமேட்டில், அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:

அதிமுக உடையவில்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது. நான் முதல்வராக இருந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் உத்தரவிட்டபோது, ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் வலிமையாக இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அதிமுக அரசுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களை  இணைத்துக் கொண்டு, துணை முதல்வர் பதவி, ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கினோம். தற்போது அதிமுகவிற்கு துரோகம் செய்த சந்தர்ப்பவாதிகள், வேறு ஒரு கட்சிக்கு பி டீம் ஆக செயல்படுகிறார்கள். பி டீம், சி டீம் என எத்தனை டீம் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதிமுகவில் நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை, தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இருமொழிக் கொள்கையில், அதிமுக உறுதியாக உள்ளது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கு அதிமுக அஞ்சாது. அதிமுக பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான முடிவு.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories: