அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அவரது புதுப்பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கடந்த 1987 அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வந்த படம், ‘நாயகன்’. மணிரத்னம் இயக்கினார். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்தார். சரண்யா ஹீரோயினாக அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார். இதற்கு பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்து பணியாற்றவில்லை.

இந்நிலையில், 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பது குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது கமல்ஹாசனின் 234வது படம். இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து பிறகு அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘35 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்துடன் பணியாற்றினேன். ஏ.ஆர்.ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தீவிர முயற்சியால் தற்போது இப்படம் கைகூடி இருக்கிறது’ என்றார். மணிரத்னம் கூறும்போது, ‘இப்படம் குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன்’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்:

இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இது கமல்ஹாசனின் 234வது படமாக இருக்கும். ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு இப்படம் உருவாகும்’ என்றார். அடுத்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனும், ‘பொன்னியின் ெசல்வன் 2’ படத்தில் மணிரத்னமும் பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: