×

பாலம் விபத்தில் 135 பேர் பலியானதால் எதிர்ப்பு அலை: கோட்டையை கோட்டை விடும் அச்சத்தில் பாஜ: மோர்பி வேட்பாளரை தேர்வு செய்வதில் தயக்கம்

மோர்பி: மோர்பி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜ தலைமை திணறி வருகிறது. குஜராத்தை கால் நூற்றாண்டாக ஆண்டு வரும் பாஜ.வுக்கு, அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் அக்னி பரீட்சையாக மாறி உள்ளது. வலுவாக இருந்த பாஜ, பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை, கல்வி, சுகாதாரம் மோசம், விவசாயிகள் பிரச்னைகள், அதிக மின் கட்டணம், மோசமான சாலைகள், இளைஞர்கள் அதிருப்தி, ஆட்சிக்கு எதிரான அலை என பல பிரச்னைகளால் சற்று ஆட்டம் கண்டுள்ளது. இந்த பிரச்னைகளை காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி மோர்பி நகரில் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து 135 பேர் பலியாகினர். இந்த விபத்து பாஜ.வுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மோர்பியில் சட்டப்பேரவை தொகுதி, பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி என ஒட்டு மொத்தமாக பாஜதான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போது பாலம் விபத்தால் மோர்பியில் அதற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.  

‘படிதார் பிரிவு மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மோர்பி சட்டப்பேரவை தொகுதி, பாஜ.வின் கோட்டையாக கருதப்பட்டாலும், 135 பேர் பலியானதால் இம்முறை தேர்தல் முடிவு மாறக்கூடும் என தெரிகிறது. ஆம் ஆத்மியின் வருகை, 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதி பிரச்னைகள் ஆகியவற்றுடன் இப்போது பாலம் விபத்தும் சேர்ந்துள்ளது. மக்களிடம் அதிருப்தி நிலவுவதை அறிந்துள்ள பாஜ, இத்தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளது.

இத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று அமைச்சராக உள்ள மெர்ஜாவையே மீண்டும் களமிறக்க அது திட்டமிட்டுள்ளது.  ஆனால், இதே தொகுதியின் படிதார் சமூகத்தை சேர்ந்த  அம்ருதியாவுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதனால், யாரை  வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்ய முடியாமல் பாஜ திணறுகிறது,’ என அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Tags : Baja ,Morby , Bridge accident, fear of losing the fort, BJP, Morbi candidate selection
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...