×

சுட்ட இடத்தில் இருந்தே இம்ரான் நாளை பேரணி: மருத்துவமனையில் அதிரடி அறிவிப்பு

லாகூர்: துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்தில் இருந்தே மீண்டும் தனது பேரணியை நாளை தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த பேரணியின் போது சுடப்பட்டார்.

இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சி தொண்டர் மோசாம் கொண்டல் பலியானார். இம்ரான் கான் உள்பட 11 பேர் காயமடைந்தனர். காலில் காயமடைந்த இம்ரான் கானுக்கு லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அவர் உடல்நலம் தேறி வருகிறார்.  

இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இம்ரான் கான், `திட்டமிட்டபடி செவ்வாய் கிழமையன்று வசிராபாத்தில் நானும் மற்ற 11 பேரும் சுடப்பட்ட, மோசாம் கொண்டல் வீர மரணம் அடைந்த இடத்தில் இருந்தே மீண்டும் பேரணியை தொடங்குவோம். லாகூரில் உரையாற்றி பேரணியை தொடங்கி வைப்பேன். செல்லும் வேகத்தை பொருத்து அடுத்த 10 அல்லது 14 நாட்களுக்குள் பேரணி ராவல்பிண்டியை சென்றடையும். பின்னர், அங்கு நடக்கும் பேரணியில் கலந்து கொள்வேன்,’ என்று தெரிவித்தார்.

சீன ஊழியர்களுக்கு புல்லட் புரூப் வாகனம்
பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தையும், தனது நாட்டில் உள்ள கஷ்கர் நகரையும் இணைக்கும் பொருளாதார பாதை திட்டத்தை சீன அரசு, ரூ.4.93 லட்சம் கோடி செலவில் நிறைவேற்றி வருகிறது. ஆனால், இந்த திட்டத்துக்காக பாகிஸ்தானில் வேலை பார்க்கும் சீனர்கள், வாகனங்களில் செல்லும் போது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படுகிறது. சீனாவுக்கு இது கவலை அளித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பான இருநாடுகளின் 11வது கூட்டு ஒத்துழைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, பாகிஸ்தானில் இத்திட்டத்துக்காக பணியாற்றும் சீன ஊழியர்களை குண்டு துளைக்காத வாகனங்களில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதிபர் ஆல்வி நலம் விசாரிப்பு
கடந்த வியாழக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டதால் காலில் குண்டடிப்பட்டு லாகூரில் உள்ள சவுகத் நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான் கானை, பாகிஸ்தான் அதிபர் ரஷித் ஆல்வி தனது மனைவி பேகம் சமீனாவுடன் சென்று நலம் விசாரித்தார்.


Tags : Imran , Imran rally tomorrow, hospital, action announcement
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...