தென் ஆப்ரிக்கா தயவில் பாகிஸ்தான் முன்னேற்றம்

ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. முதல் பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 2வது பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கப் போவது யார் என்பதில் லீக் சுற்றின் இறுதி நாள் வரை சஸ்பென்ஸ் நீடித்தது. இந்த நிலையில், நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.  

தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி: அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட தென் ஆப்ரிக்கா டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. மைபர்க் 37, மேக்ஸ் 29, கூப்பர் 35, ஆக்கர்மேன் 41* ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் எட்வர்ட்ஸ் 12* ரன் எடுத்தனர்.  தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ் 2, அன்ரிச், மார்க்ரம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன் மட்டுமே எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.  

ரூஸோ 25, கிளாஸன் 21, கேப்டன் பவுமா 20, மார்க்ரம், மில்லர் தலா 17, டி காக், மகராஜ் தலா 13 ரன் எடுத்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் குளோவர் 3, ஃபிரெட் கிளாஸன், பாஸ் டி தலா 2, பால் வான் 1 விக்கெட் கைப்பற்றினர். ஆக்கர்மேன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற அருமையான வாய்ப்பை வீணடித்த தென் ஆப்ரிக்கா பரிதாபமாக வெளியேறியது.  

இந்த போட்டி முடிந்ததுமே, 2வது பிரிவில் இருந்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியானது. பாகிஸ்தானுக்கு லக்: அடிலெய்டில் நேற்று நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதின. இப்போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டின.

  டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்தது. ஷான்டோ 54, சர்கார் 20, அபிப் உசேன் 24 ரன் எடுக்க மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாக். பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 4 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். ஷதாப் கான் 2, ராவுப், இப்திகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ரிஸ்வான் 32, பாபர் 25, முகமது ஹாரிஸ் 31, ஷான் மசூத் 24* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் நசும், ஷாகிப், முஸ்டாபிசுர், எபாதத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அப்ரிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: