பைக்கை மறித்து 3 பேரை கடித்து குதறியது கரடி: மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை

கடையம்: பைக்கை வழிமறித்து மசாலா வியாபாரி உட்பட 3 பேரை கரடி கடித்து குதறியது. 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துமக்கள் போராட்டத்தை தொடர்ந்து கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே கருத்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் பைக்கில் மசாலா வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான் பிள்ளை குடியிருப்புக்கு பைக்கில் வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென வந்த கரடி, பைக்கை மறித்து அவரை கீழே தள்ளி கடித்து குதறியது. அப்பகுதியினர் ஓடி வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, அண்ணன் தம்பியான நாகேந்திரன் (56), சைலப்பன் (50) ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. மூவருக்கும் தலை, முகம், கன்னம், கண் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கரடி துரத்தியதால் ஓடிய பொதுமக்களில் பலர் கிழே விழுந்து காயமடைந்தனர். பின்னர் கரடி காட்டுக்குள் ஓடி மறைந்தது. தகவலின் பேரில் கடையம் வனத்துறையினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரடியை சுட்டுப் பிடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் அதிகாரிகளும் வந்து 2 நாளில் கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து கரடியை பிடிக்க சம்பவம் நடைபெற்ற இடம் அருகே வனத்துறையினர் கூண்டு வைத்தனர். தொடர்ந்து கரடியின் நடமாடத்தை கண்காணித்து வந்தனர். இதில் காட்டுப்பகுதியில் கரடி பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். நேற்றிரவு 7 மணியளவில் நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் சுமார் 15 அடி தொலைவிலிருந்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினர். கரடி மயங்கியதும் வனத்துறையினர் வலை மூலம் கரடியை பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மயக்கம் தெளிந்ததும் கரடி முண்டந்துறை பீட் வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories: