×

தண்ணீர் வரத்து அதிகரிப்பு: களக்காடு தலையணையில் இன்று 2வது நாளாக குளிக்க தடை

களக்காடு: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் களக்காடு தலையணை நீர்விழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 2வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளில் லேசான மழை காணப்பட்ட போதிலும் உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையொட்டி தடுப்பணை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி விடாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் இன்று 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வன சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kalakadu Payaya , Increase in water supply: Ban on bathing in Kalakadu Payaya for 2nd day today
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...