×

விடிய விடிய கொட்டியது; டெல்டாவில் மீண்டும் பலத்த மழை: விளை நிலங்களில் நீர் தேங்குவதால் விவசாயிகள் கவலை

திருச்சி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் துவங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டாவில் நேற்று மழை ஓய்ந்திருந்த நிலையில் இரவில் இருந்து மீண்டும் மழை பொழிய துவங்கி உள்ளது. நாகையில் 5வது நாளாக இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்று காலையும்  மழை பெய்து வருகிறது.

சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தநிலையில், இன்று அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் வடிந்த பகுதிகளான ஆச்சாள்புரம், அளக்குடி, நாதல்படுகை, நாணல்படுகை, சந்தைபடுகை, முதலைமேடு திட்டு, மகேந்திரபள்ளி, காட்டூர், கோரைதிட்டு, பழையபாளையம், மகாராஜபுரம், வேட்டங்குடி, உமையாள்பதி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர், மன்னார்குடியில் காலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது.  தஞ்சையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கும்பகோணத்தில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, ஏனாதி, மைலாப்பூர், மேலைச்சிவபுரி, வேகுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இந்த மழையால் கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

பெரம்பலூர், வேப்பந்தட்டை,  குன்னம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி மணி முதல் பலத்த மழை பெய்தது. திருச்சி மாவட்டம் துறையூர், கொப்பம்பட்டி, செங்காட்டுப்பட்டி, காளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7.30மணி முதல் 8.30 மணி வரை  பலத்த மழை பெய்தது.  

சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம்  ஊராட்சி வழியாக நாட்டு கன்னி மண்ணியாறு மற்றும் முல்லை ஆறு ஆகியவை சென்று  கீழமூவர்கரை பகுதியில் கடலில் கலக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழையின் காரணமாக இந்த 2 ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது.

இந்தநிலையில் கோனையாம்பட்டினம், தென்னாம்பட்டினம், கீழமூவர்கரை,  மாத்தாம்பட்டினம் ஆகிய இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு வெள்ள நீர் 800  ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் புகுந்தது. ராமலிங்கம் எம்.பி. மற்றும் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர்  நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட விளைநிலங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Tags : Delta , The dawn broke; Heavy rains again in Delta: Farmers worried as water stagnates in arable lands
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு