நெல்லை: நெல்லை, தென்காசியில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாநகர் பகுதிகளில் நேற்று மழை குறைந்தாலும் புறநகர் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத் துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு உள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நேற்று காலை முதலே களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மலை பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் மாலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் கலங்கலாக கொட்டியது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று பகலிலும் வெயில் இல்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.
மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு, 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்தது. இதனால் ஐந்தருவியில் மட்டும் மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் பாதுகாப்பு கருதி 2வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.