×

1037-வது சதய விழாவில் நினைவுகூர்ந்து ராஜராஜசோழன் படத்தை முதுகில் டாட்டூவாக வரைந்த சேலம் வாலிபர்; வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சி

சேலம்: சேலத்தில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் படத்தை, சேலம் வாலிபர் முதுகில் டாட்டூவாக வரைந்துள்ளார். அவரது 1037வது சதய விழாவில் வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறினார். சோழ தேசத்தை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன், காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி வைத்துள்ளார். அவரது நினைவை பறைசாற்றும் வகையில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், அக்கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதனை பார்த்து வரலாற்று அறிஞர்களும், வெளிநாட்டினரும் இன்றைக்கும் வியந்து பார்த்து வருகின்றனர்.

ராஜராஜசோழனின் 1037வது சதய விழா கடந்த 2, 3ம் தேதிகளில், தஞ்சை பெரிய கோயிலில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இனி ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டில் சதய விழாவின் போது, ராஜராஜ சோழனின் நினைவுகளை பலரும் நினைவுகூர்ந்தனர். இந்த வகையில் சேலம் மரவனேரியில் வசித்து வரும் வங்கி லாக்கர் டெலிவரி நிறுவன ஊழியர் ஜெயபிரகாஷ் (30), தனது முதுகில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் படத்தை பச்சைக்குத்த (டாட்டூ) ஏற்பாடு செய்தார்.

கடந்த 3ம் தேதி காலை 10 மணிக்கு அம்மாபேட்டையை சேர்ந்த நந்து என்பவர், ஜெயபிரகாசின் முதுகில் டாட்டூ வரைய தொடங்கினார். இரவு 10 மணிக்கு, அதாவது 14 மணி நேரத்தில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றத்தை படமாக டாட்டூ வரைந்து முடித்தார். இதுபற்றி ஜெயபிரகாஷ் கூறுகையில், ‘நான் பள்ளியில் படிக்கும்போதே, மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சிமுறை, அவர் கட்டிய பெரிய கோயில் பற்றி அறிந்து வியந்தேன்.

1000 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பெரிய கோயில் காலத்தால் அழியாது. அந்த வரலாற்று சாதனையை பெருமைப்படுத்தவும், ராஜராஜசோழனை என்றைக்கும் நினைவில் வைத்திருக்கவும் விரும்பினேன். அதற்காக 1037வது சதய விழாவில், எனது முதுகில் தஞ்சை பெரிய கோயில், ராஜராஜசோழன் படத்தை டாட்டூவாக வரைந்துள்ளேன். இது அப்படியே எனது முதுகில் இருக்கும். இச்செயலை செய்ததை நான் பெருமையாக கருதுகிறேன்,’ என்றார்.


Tags : Salem Valibur ,Rajarajasozhan , A Salem youth who tattooed the image of Rajarajacholan on his back in memory of the 1037th Sadaya festival; Resilience as historical achievement cannot be hidden
× RELATED மான் வேட்டையாடிய 4 பேர் கைது-நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்