இம்ரான் கானின் ‘பேட்டி’ ஒளிபரப்பு தடை நீக்கம்: பாகிஸ்தான் அரசு திடீர் பல்டி

இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் பேட்டியை ஒளிபரப்பும் தடையை நீக்கி பாகிஸ்தான் அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது  கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அந்தநாட்டு அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நாடு முழுவதும் அவரது பிடிஐ கட்சித்  தொண்டர்கள் கடுமையானப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து கொண்டே அவர் செய்தியாளர்களை சந்தித்து, ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இவரது பேட்டி ஒளிபரப்ப சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பிறப்பித்த உத்தரவில், ‘இம்ரான் கானின் செய்தியாளர் சந்திப்புகளை ஒளிபரப்பவோ அல்லது மறு ஒளிபரப்பு செய்யவோ சேனல்கள் மீதான தடையை தளர்த்த வேண்டும்.

அரசியலமைப்பின் பிரிவு 19 (பேச்சு சுதந்திரம்) இன் கீழ் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். அரசியல் எதிரிகளுக்கு எதிராக இம்ரான் கான் பேச விரும்பினால், தொடர்ந்து அவர் பேசட்டும். இம்ரான் கானின் பேச்சு மக்களுக்குச் சென்றடையட்டும்; மக்களுக்கு உண்மை தெரியட்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: