×

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்ைக எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; சென்னையில் கடந்தாண்டு மழையால் தத்தளித்த 80 சதவீத இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கவில்லை. இதற்காக தமிழக முதல்வரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சென்னை நகரின் சில பகுதிகளில் நிலவிவரும் கழிவுநீர் பிரச்னைகளை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய மருத்துவ முகாமில், சென்னையில் 82 ஆயிரம் பேர் பயன்பெற்றனர். அடுத்து வரும் மழைக்குள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வரும் 9ம்தேதி பெருமழை வந்தால், பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேவையான இடங்களில் மின்மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு, நாளை முதல் கொசுவலை வழங்கும் பணி துவங்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கவும் மக்களிடையே ஜாதி, மத மோதல்கள் ஏற்படுவதை தடுக்கவும் தமிழக முதல்வர் தேவையான கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Park ,K. Stalin ,Minister ,B. K. SegarBabu , Chief Minister M.K.Stal's action to make Tamil Nadu a peace park: Minister PK Shekharbabu interview
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...