பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று அமைச்சர் நேரு கூறினார். சென்னை திருவிக.நகர் மண்டல அலுவலகத்தில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அமைச்சர் பிகே.சேகர்பாபு முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தகூட்டத்தில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு, மழை கோட் வழங்கினார்.
இதன்பின்னர் அமைச்சர் நேரு கூறியதாவது; கொளத்தூர், திருவிக.நகர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் தண்ணீர் தேங்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மழைநீர் அகற்றுவதற்கு தேவையான மோட்டார்கள் வழங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு மருந்து மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். 4 நாட்களுக்கு மழை இருக்காது என்பதால் மழைநீர் வடிகால், கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த தீவிர நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் தேங்குவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதால் ஏரிகள் நிரம்பிய நிலையில் இருக்கக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
