×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை நீடிப்பு; குற்றாலம், மணிமுத்தாறு, களக்காடு தலையணையில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு   பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதிகளில்  நேற்று மழை குறைந்தாலும் புறநகர்  பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி  மலை பகுதிகளில் கனமழை  பெய்தது. இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி  அருவியில் குளிக்கத் தடை விதித்து களக்காடு முண்டந்துறை  புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட  மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால்  சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு உள்ள தலையணையில் ஓடும்  தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க  சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நேற்று காலை முதலே களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை  மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து களக்காடு புலிகள்  காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க  நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தடுப்பணை பகுதியில்  சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி விடாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு  ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை  ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சுற்றுலா  பயணிகள் தலையணையை சுற்றிப் பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த  சுற்றுலா பயணிகள்ள் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மரப் பாலத்தின் மீதேறி  செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால்  தலையணையை சுற்றி பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று காலை 6  மணியுடன் நிறைவடைந்த 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில்  53.80 மில்லி மீட்டர் மழை  பதிவானது. சேர்வலாறு அணை பகுதியில் 52  மி.மீ. மழை பெய்தது.  அம்பையில் 44 மிமீ, பாபநாசம் 41,  மணிமுத்தாறு 36.40,  ராதாபுரத்தில் 24 மிமீ, நம்பியாறு 17  மிமீ, கொடுமுடியாறு 4  மிமீ, நெல்ைலயில் 2.80 மிமீ, பாளையில் 1  மிமீ மழை  பதிவானது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு  நீர்வரத்து  அதிகரித்துள்ளது.

முக்கிய அணையான   பாபநாசம் நீர்மட்டம் 87 அடியாக உள்ளது. விநாடிக்கு   1,321 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும்   குடிநீர் தேவைக்காக 1,041 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீரிருப்பு 97.44 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை 71.45 அடியாக உள்ளது. அணைக்கு 134 கனஅடிநீர் வருகிறது. வடக்கு பச்சையாறு அணை   நீரிருப்பு 13.25 அடியாக உள்ளது. நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49   அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீரிருப்பு 48.50 அடியாக உள்ளது. நெல்லை  மாநகரில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் விட்டு விட்டு லேசான சாரல் மழை   பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மலை பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் மாலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பழைய  குற்றாலத்திலும் தண்ணீர் கலங்கலாக கொட்டியது. ஐந்தருவியிலும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று பகலிலும் வெயில் இல்லை. வானம்  மேகமூட்டமாக காணப்பட்டது.

அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.  மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின்  காரணமாக வெள்ளப்பெருக்கு, 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஐந்தருவியில்  மட்டும் வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்தது. இதனால் ஐந்தருவியில்  மட்டும் மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  மெயினருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் பாதுகாப்பு கருதி 2வது நாளாக  நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக   ராமநதி அணை பகுதியில் 135 மிமீ மழை பெய்தது. சிவகிரியில் 62 மிமீ மழை  பெய்தது. தென்காசி 49, சங்கரன்கோவிலில் 42, ஆய்க்குடி  38, செங்கோட்டை 19.8,  கடனா 18, கருப்பாநதி 52.5, குண்டாறு 14.2,  அடவிநயினார் 14 மில்லி மீட்டர்  மழை பெய்துள்ளது. குண்டாறு அணையின்  நீர் இருப்பு 33.62 அடியாக உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்  இருப்பு  84.75 அடியாக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வடகிழக்கு   பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Paddy ,South Kasi ,Thoothukudi ,Kudulalam ,Manimutharam ,Galakkadam , Continued rains in Nellai, Tenkasi, Tuticorin; Kurdalam, Manimutthar, Kalakadu pillow bathing ban: Tourists disappointed
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...