×

வீரபாண்டி ஆற்றில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் பயிற்சி

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் ஓடும் முல்லைப்பெரியாற்றில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் மீட்பு பணி மேற்கொள்ளும் முறை குறித்தும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஆறுகளில் தற்காலிக படகுகள் உதவியுடன் கடந்து செல்லும் முறை குறித்தும், ஆற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 150 பேருக்கான பயிற்சி தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் நேற்று நடந்தது.

இப்பயிற்சிக்கு கமாண்டர் எஸ்.கே.யாதவ் தலைமை வகித்தார். துணை கமாண்டர் துர்கேஷ் சந்தா பயற்சி அளித்தார். பயிற்சியின்போது எவ்வித அசம்பாவிதமும் நடந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி கமாண்டரான டாக்டர் சாரு தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர். தேனியில் பயிற்சி பெற்ற இப்படை வீரர்களுக்கு தேவையான வழிகாட்டுதலாக தேனி தீயணைப்பு படை நிலைய அலுவலர் பழனி உடனிருந்தார். இப்பயிற்சியின்போது, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கயிறு கட்டி வீரர்கள் கடந்து செல்வது, வாழை மட்டைகளை தற்காலிக கட்டுமரம்போல உருவாக்கி அதில் அமர்ந்து வெள்ளப்பெருக்குள்ள ஆற்றை கடக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Indo ,Veerabandi River , Training of Indo-Tibetan Border Guards at Veerapandi River
× RELATED மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசு தீர்வுகாண அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்