×

செம்பரம்பாக்கத்தில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக 4 தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதாலும், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பதை 500 கன அடியாக அதிகரிக்க காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நேற்று காலை 10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2862 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து மணிக்கு 400 கன அடியாகவும் உள்ளது.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Sembarambakkam , Opening of 500 cubic feet of surplus water from Sembarambakkam
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...