×

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நெற்பயிரை நவ. 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-23ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சம்பா, தாளடி, பிசான பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் 5.90 லட்சம் ஏக்கர், 10.38 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் ‘விவசாயிகள் கார்னர்’ எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீட்டு தொகையில், 1.5 சதவீத தொகையையும், பருத்தி, வெங்காயத்துக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீத தொகையையும் செலுத்தினால் போதுமானது. தற்போது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிரை பதிவுசெய்து, பயனடைய வேண்டும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட விவசாயிகள் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

Tags : Tamil Nadu government , Due to the intensification of northeast monsoon, paddy crop in November. Must get insurance by 15th: Tamil Nadu government appeal to farmers
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...