தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் இளம்பரிதி(21). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில், 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று மாலை சக மாணவர்கள் வெளியே அழைத்த போது, அசைன்மென்ட் உள்ளதாகக்கூறி அறையிலேயே இருந்தார். வெளியே சென்ற மாணவர்கள், இரவு 7.30 மணியளவில் திரும்பி வந்த போது, இளம்பரிதி பேனில் டவலால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் வந்து மாணவன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் சோதனையிட்ட போது, இளம்பரிதியின் நோட்டில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், ‘என்னால் நல்லா படிக்க முடியவில்லை. அதனால், என்னால் நல்ல டாக்டராக வர முடியாத சூழ்நிலையால் தற்கொலை செய்து கொள்கிறேன்.. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியிருந்தார். விசாரணையில், கடந்த ஆண்டு தேர்வில் அவர் தோல்வி அடைந்ததால், 3ம் ஆண்டுக்கு செல்ல வேண்டிய அவர், 2ம் ஆண்டிலேயே தொடர்ந்து படித்து வந்துள்ளார். சக நண்பர்கள் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால், மன வருத்தத்தில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. லாரி டிரைவரான இளம்பரிதியின் தந்தை கண்ணன், ஒரே மகன் இறந்த துக்கம் தாளாமல் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Related Stories: