×

நாகரிகமாக ஆடை அணிய வேண்டும் கரகாட்டத்தில் ஆபாச பாடல் நடனம் இடம் பெறக்கூடாது: கட்டுப்பாடுகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை:  மதுரை மாவட்டம் மேலப்பட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி இரவு கரகாட்டம் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இதற்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு: ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள், அநாகரிகமான வார்த்தைகள் இடம் பெறும் வகையில் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. கண்ணியமாகவும், நாகரிகமான முறையிலும் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சி, சாதி, மதம் மற்றும் சமூகத்தை குறிப்பிடும் வகையில் பாடல்களோ, நடனமோ இருக்கக்கூடாது. ஜாதி, சமூக பாகுபாடின்றி நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அதற்கு பொறுப்பாவார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர்கள், கலைஞர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்களை சேகரிக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அனுமதி உண்டு. இவ்வாறு நிபந்தனைகளுடன் கரகாட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Karakatam ,ICourt , Modest dress code No obscene song and dance at Karakatam: Court branch permits with restrictions
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...