×

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. மேலும், பூணூல் அணிந்து பஞ்சகச்சம் வேட்டியுடன், முன் கொசுவம், பின் கொசுவத்துடன் கம்பீரமாக வலக்கையில் கெண்டை ஆயுதமும், இடக்கையை மடக்கிய நிலையிலும் காட்சி தருகிறார்.

அதேபோல் கல் தூணில் கருடாழ்வார் சிற்பம் 58 சென்டிமீட்டர் உயரமும், 28 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. ஸ்தூபக்கல் கலை நயத்துடன் உள்ளது. ஊரின் மையப்பகுதியான சந்து தெருவில் கோமாரிக்கல் அல்லது மந்தைவெளிகல் என்று அழைக்கப்படும் பழமையான கல் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லின் உயரம் 60 சென்டிமீட்டர், அகலம் 30 சென்டிமீட்டர். தற்போது பொன்னியம்மன் கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் ஏற்கனவே லட்சுமி நாராயணன் கோயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோயில் முழுவதும் காணாமல் போன நிலையில் அதனுடைய எச்சங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் கூறும் தகவல் உறுதியாகிறது.

 இவ்வூர் முன்னோர்களால் விஜய பூபதி நகரம் என்று அழைக்கப்பட்டதாக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வூரில் ஏற்கனவே கண்டெடுத்த மூத்த தேவி சிற்பம், சாமுண்டி சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கிபி 9ம் நூற்றாண்டிற்கும் 10ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். சிற்பங்களின் கலை நுணுக்கங்களை பார்க்கும்போது பல்லவர்கள் அல்லது சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் ரீதியாக ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ayyanar ,Nelwai ,Seyyar , 9th century Ayyanar statue, Garudazhwar sculpture found in Nelwai village near Cheyyar
× RELATED 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அய்யனார் கோயில் திறப்பு