×

4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து: நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘அவுட்’

சிட்னி:  ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி முதல் பிரிவில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலக கோப்பை டி20 தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில் நியூசிலாந்து (7 புள்ளி) அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவும் 5 போட்டியில் 7 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அந்த அணியின் ரன் ரேட் மைனசில் இருந்தது. இந்த நிலையில், முதல் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நேற்று மோதின.

இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற முனைப்புடன் களமிறங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிகபட்சமாக 67 ரன் (45 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். பானுகா ராஜபக்ச 22, குசால் மெண்டிஸ் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 142 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணைந்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 75 ரன் சேர்த்தனர். பட்லர் 28 ரன், ஹேல்ஸ் 47 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். 3வது வீரராக வந்த ஸ்டோக்ஸ் ஒரு முனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... புரூக், லிவிங்ஸ்டன் தலா 4, மொயீன் அலி 1, சாம் கரன் 6 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வென்றது. ஸ்டோக்ஸ் 42 ரன் (36 பந்து, 2 பவுண்டரி), வோக்ஸ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் லாகிரு, ஹசரங்கா, தனஞ்ஜெயா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடில் ரஷித் (4-0-16-1) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் முதல் பிரிவில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

சூப்பர் 12 சுற்று புள்ளி பட்டியல்
முதல் பிரிவு
ரேங்க்    அணி    போட்டி    வெற்றி    தோல்வி    ரத்து    புள்ளி    ரன்ரேட்
1    நியூசிலாந்து    5    3    1    1    7    2.113
2    இங்கிலாந்து    5    3    1    1    7    0.473
3    ஆஸ்திரேலியா    5    3    1    1    7    -0.173
4    இலங்கை    5    2    3    0    4    -0.422
5    அயர்லாந்து    5    1    3    1    3    -1.615
6    ஆப்கானிஸ்தான்    5    0    3    2    2    -0.571
2வது பிரிவு
ரேங்க்    அணி    போட்டி    வெற்றி    தோல்வி    ரத்து    புள்ளி    ரன்ரேட்
1    இந்தியா    4    3    1    0    6    0.730
2    தென் ஆப்ரிக்கா    4    2    1    1    5    1.441
3    பாகிஸ்தான்    4    2    2    0    4    1.117
4    வங்கதேசம்    4    2    2    0    4    -1.276
5    ஜிம்பாப்வே    4    1    2    1    3    -0.313
6    நெதர்லாந்து    4    1    3    0    2    -1.233

Tags : England ,Sri Lanka ,Australia , England beat Sri Lanka by 4 wickets to reach semi-finals: defending champions Australia 'out'
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...