×

டிஎன்சிஏ புதிய தலைவராக அசோக் சிகாமணி தேர்வு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிஎன்சிஏ தலைவராக 2019ல் பதவி ஏற்ற ரூபா குருநாதன் 2021 டிசம்பரில் திடீரென பதவி விலகினார். அதன் பிறகு  புதிய தலைவர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 90வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. தலைவர், இணை செயலாளர், உதவி செயலாளர் பதவிகளுக்கு தலா 2 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

நேற்றைய கூட்டத்தில் எஸ்.பிரபு, துர்கம்பூடி சிவ கேசவ ரெட்டி, காளிதாஸ் வாண்டையார் ஆகியோர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றதுடன், தேர்தல் தொடர்பாக தாங்கள் தொடர்ந்த வழக்குகளையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெறுவதாகவும் உறுதி அளித்தனர். அதன்பிறகு எல்லா பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக அசோக்  சிகாமணி தேர்வு செய்யப்பட்டார். இவர் தமிழக அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். துணைத் தலைவராக  ஆதம் சையத், செயலாளராக  பழனி, இணைச் செயலாளராக  சிவகுமார், உதவிச் செயலாளராக ஆர்.என்.பாபா, பொருளாளராக சீனிவாசராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்வாகினர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அணிக்காக 10 முதல் 24 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்சிஏ புதிய தலைவர் அசோக், ‘சேப்பாக்கம் அரங்கின் கூடுதல் கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு ஜனவரி முதல் சர்வதேச ஆட்டங்களை இங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அணிக்கான வீரர்களை தேர்வுக் குழு மூலமாக இல்லாமல், நேரடியாக களத்துக்கு சென்று தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்களுக்கு நேரில் சென்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய உள்ளோம். இதன் மூலம் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வெல்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்க உள்ளோம்’ என்றார்.


Tags : Ashok Chikamani ,TNCA , TNCA elects Ashok Chikamani as its new president
× RELATED சில்லி பாயிண்ட்…….