ஆந்திராவில் பரபரப்பு முன்னாள் முதல்வர் சந்திரபாபு பேரணியில் கல்வீசி தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி காயம்

திருமலை: ஆந்திராவில் முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகர்மா கிராமத்தில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக தமது பாதுகாப்பு வாகனங்களுடன் சந்திரபாபு பேரணியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் சந்திரபாபுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி(சிஎஸ்ஓ) மதுபாபு என்பவர் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு காயமின்றி தப்பினார். இதற்கு சந்திரபாபு உடனடியாக மைக்கை வாங்கி கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். உடனே, போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ‘ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் அனைத்து பிரிவினரும் ஏதாவதொரு விதத்தில் சிக்கலை எதிர்கொண்டு வருவதால், வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும்,’ என்று மக்களுக்கு சந்திரபாபு அழைப்பு விடுத்தார். பின்னர், நந்திகர்மாவில் உள்ள காந்தி மையத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், ‘மக்கள் அமைதியான சூழலை விரும்பினால், தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே வழி’ என்றார். சந்திரபாபு பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவரது மகன் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபுவின் பாதுகாப்பு வாகனம் மீது ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: