கர்நாடகா நடைபயணத்தில் சினிமா பாடல் ராகுல் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: காங்கிரசின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது, கன்னட திரைப்படமான கேஜிஎப் இசையை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உட்பட மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி கேஜிஎப்-2 இந்தி   திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த பாடல்களை ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பெங்களூரைச் சேர்ந்த மியூசிக் ரெக்கார்டிங் நிறுவனத்தை சேர்ந்த நவீன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்தி மற்றும் இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் மீது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் யஸ்வந்த்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பதிப்புரிமை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஐபிசி பிரிவுகள் 120பி, 403, 465 ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அக்கட்சியின் டிஜிட்டல்  பிரிவு தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

Related Stories: