நாட்டில் முதல் முறையாக விமானத்தில் பறந்தது குமரி உதயகிரி பூங்காவில் அரிய வகை கழுகினை 5 ஆண்டுகள் பராமரித்தது எப்படி?.. வனத்துறை அதிகாரி பேட்டி

நாகர்கோவில்:  நாட்டில் முதன் முறையாக குமரியில் இருந்து விமானத்தில் பயணித்த  அரிய வகை கழுகினை, குமரி உதயகிரி பூங்காவில் 5 ஆண்டுகள் மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தோம் என வனத்துறை அதிகாரி கூறினார். குமரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகி புயல் தாக்கியது. அப்போது சினேரியஸ் வகையைச் சேர்ந்த கழுகு குஞ்சு, காயத்துடன் ஆசாரிபள்ளம் அருகே மீட்கப்பட்டு மாவட்ட வனத்துறையால் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, உதயகிரி பல்லுயிர் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு 5 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அரிய வகை கழுகு, குமரியில் இருந்து சென்னை கொண்டு செல்லப்பட்டு பின், விமானம் மூலம் ஜோத்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவுக்கு நேற்று முன் தினம் கொண்டு செல்லப்பட்டது. குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் கழுகை மிகவும் பாதுகாப்பான முறையில், ஜோத்பூருக்கு கொண்டு சென்றனர். நேற்று முன் தினம் காலை ஜோத்பூர் சென்ற இந்த குழுவினர், இன்று இரவு சென்னை வருகிறார்கள். இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா கூறியதாவது : சினேரியஸ் வகை கழுகுகள் தென்னிந்திய பகுதிகளில் காணப்படுவது மிக அபூர்வமாகும்.

இவை ரஷ்யா, சீனா , சைபிரியா பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டவை. குளிர்காலங்களில் இடப்பெயர்ச்சி செய்து இந்தியாவுக்கு வரும் இக்கழுகுகள், பெரும்பாலும் இமயமலை பகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் காணப்படக் கூடியவை ஆகும். காற்றின் வேகம் காரணமாக இந்த கழுகு, குமரி மாவட்டத்துக்கு  வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளாக இந்த கழுகினை மிகவும் பாதுகாப்பான முறையில் குமரி மாவட்டத்தில் உள்ள உதயகிரி கோட்டை பூங்காவில் பராமரித்தோம். 2 நாட்களுக்கு ஒருமுறை சிக்கன், இறைச்சி வகைகள் உணவாக வழங்கப்பட்டன. 750 கிராம் உணவு வழங்கப்பட்டது.

இத்தகைய கழுகினை சிறிய இடத்தில் வைத்திருப்பது உகந்தது அல்ல என்பதால் தமிழ்நாடு வனத்துறை இக் கழுகினை அதன் இயற்கை வாழ்விடத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வந்தது. இதன் அடிப்படையில் இந்தக் கழுகை விடுவதற்கு உகந்த இடமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இங்குள்ள மச்சியா உயிரியல் பூங்காவில் கழுகுகளை பராமரிக்க தேவையான வசதிகள் உள்ளன. இதன் அருகில் உள்ள கிரு என்கிற இடம் இறந்த கால்நடைகளை கொட்டும் இடமாகவும் உள்ளது.

இங்கு எப்போதும் ஆயிரக்கணக்கான கழுகுகள் காணப்படும். இந்த இடத்தில் இந்த கழுகினை விடுவித்தால் உணவுக்கான பிரச்னையும் இருக்காது என வனத்துறை முடிவு செய்து, இக்கழுகினை ஜோத்பூருக்கு கொண்டு செல்ல தீர்மானித்தது. ஜோத்பூர் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 2600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை அல்லது ரயிலில் செல்வதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்பதால் இந்த கழுகை விமான மூலம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதியும் வனத்துறையால் பெறப்பட்டது.

கடந்த 30ம் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 3 நாட்கள் ஓய்வுக்கு பின்,  கடந்த 3ம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது உள்ள விதிகளின்படி எந்த ஒரு விமான நிறுவனமும் நாய்கள் , பூனைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளை தவிர வேறு எந்த விலங்குகளையும் விமானத்தில் அனுமதிப்பதில்லை. தமிழ்நாடு வனத்துறை விமான போக்குவரத்து அமைச்சகத்தினை தொடர்பு கொண்டு இந்த கழுகின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, நாட்டிலேயே முதன்முறையாக ஒரு அரியவகைக் கழுகினை விமானத்தில் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற்றது. விமான நிலைய பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் இந்த கழுகு விமானத்தில் ஏற்றி இறக்கப்பட்டது. மற்ற பொருட்கள் வைக்கும் இடத்தில் இல்லாமல் தனியாக சிறப்பிடம் ஒதுக்கப்பட்டு கழுகு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு கூறினார்.

கழுகின் பதற்றத்தை குறைக்க பயிற்சி

கழுகினை விமானத்தில் கொண்டு செல்வதற்கு முன் அதன் பதற்ற தன்மையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டது. குறிப்பாக அது வாழ்ந்த இடத்தில் உள்ள மண், செடி, கொடிகளுடன் பிரத்யேக கூண்டு உருவாக்கப்பட்டது. தினமும் ஒரு வாகனத்தில்  பயணிக்க வைத்து பயணத்தின் போது ஏற்படும் அதிர்ச்சிக்கு பழக்கப்பட்டது. இரவு நேரத்தில் கழுகு அமைதியாக ஓய்வு எடுக்கும் என்பதால் இரவு நேரத்தில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானிகளுக்கு சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டு வெப்பநிலை மற்றும் காற்றழுத்தம் சீராக வைக்கப்பட்டது. உதயகிரி கோட்டையில் இக்கழுகினை பராமரித்து வந்த பணியாளரும், ஜோத்பூர் வரை அழைத்து செல்லப்பட்டு தொடர்ச்சியாக அவரை கழுகுடன் இருக்க வைத்து கழுகுக்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட்டது.

10 பேர் கொண்ட குழு அமைப்பு

கழுகுகள் முற்றிலுமாக அழிந்து போனால் நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகரித்து மனித இனத்திற்கே ஆபத்தாக அமையும். எனவே மனித இனம் வாழ வேண்டும் என்றால் கழுகுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது தமிழக அரசு கழுகுகளை பாதுகாக்க பத்து நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: