6 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் 7 தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: தெலங்கானா, பீகார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது.

இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் தலா ஒரு தொகுதியும் இருந்தன. இத்தொகுதிகளில் பாஜக மற்றும் மாநில கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பீகார் இடைத்தேர்தலில் பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையேயும், அரியானாவில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையேயும், தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாஜக மற்றும் மாநில கட்சிகளான தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாதி மற்றும் பிஜூ ஜனதா தளம் இடையே போட்டி இருந்தது.

தெலங்கானா இடைத்தேர்தலில் ஒரு சில இடங்களில் பாஜக மற்றும் டிஆர்எஸ் தொண்டர்கள் இடையே மோதல் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அதேபோல் தெலங்கானா இடைத்தேர்தலில் அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை (நவ. 6) நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளும் நாளை தெரிந்துவிடும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னதாக மேற்கண்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: