அழகர்கோயிலில் தைல காப்பு திருவிழா: நூபுர கங்கையில் இன்று சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்

அழகர்கோவில்: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழா இன்று காலை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நூபுரகங்கையில் பெருமாள் நீராடினார். இதையொட்டி சுந்தரராஜ பெருமாள் தனது இருப்பிடத்தில் இருந்து இன்று காலை நூபுர கங்கைக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டார்.

மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்ற பெருமாளுக்கு வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்லையில் தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோயில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு பெருமாள் திருத்தைலங்கள் சாத்தப்பட்டு நூபுர கங்கை தீர்த்தத்தில் தொட்டி திருமஞ்சனம் நடந்தது.

பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்பு மாலையில் மீண்டும் வந்த வழியாக பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி அழகர்கோயிலில் தனது இருப்பிடம் வந்து சேருகிறார்.

Related Stories: