×

பொள்ளாச்சியில் இன்று 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று நடந்த வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை (புட்செல்) மாவட்ட எஸ்.பி. பாலாஜி உத்தரவின்பேரில், கோவை மாவட்ட சிவில்சப்ளை சிஐடி டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில், பொள்ளாச்சி அலகு இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்.ஐ. விவேகானந்தன் மற்றும் போலீசார் தமிழக- கேரள எல்லையான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செம்மனாம்பதி, மீனாட்சிபுரம், கோவை அருகே வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை எஸ்பி பாலாஜி மற்றும் போலீசார், பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடையில் 100 மூட்டைகளில் மொத்தம் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட குனியமுத்தூரை சேர்ந்த வல்லரசு (23),  குறிச்சியை சேர்ந்த செந்தில்நாதன் (36) ஆகியோரை கைது செய்தனர்.

கேரள மாநிலத்திற்கு செல்லும் வழித்தடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புட்செல் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Pollachi , Pollachi, 5 tonnes of ration rice, confiscated`
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!