இந்தியாவின் சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மன் பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரான் நாட்டு தந்தை, மகன் கைது: தலைநகர் டெல்லியில் நூதன மோசடி அம்பலம்

புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரானிய தந்தை, மகன் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மனி பெண் உள்ளிட்ட சிலரிடம் கொள்ளையடித்த கும்பலில் ஈரான் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு போலி அடையாள அட்டைகளை தயாரித்து கொடுத்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) சந்தன் சவுத்ரி, ‘ஜெர்மனியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கடந்த செப். 12ம் தேதி தனது கணவருடன் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​​​4 பேர் கும்பல் அவர்களது காரை மடக்கியது. அவர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

பின்னர் அவர்களது பாஸ்போர்ட்டைக் காட்டச் சொன்னார்கள். அந்தப் பெண் தனது பணப்பையைத் திறந்தபோது, ​அதில் இருந்த 3,000 யூரோக்களை பறித்துக் கொண்டு, அந்த கும்பல் தப்பியோடியது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஈரான் நாட்டை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து கிரேட்டர் நொய்டா பதுங்கி இருந்த  முகமது யூனுஸ் (55) மற்றும் அவரது மகனான முகமது குலாம் பெஹ்ராமி (29) ஆகியோரை கைது செய்தோம்.

இருவரும் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு பலரிடம் பணம் பறித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினரை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலி ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த ஃபர்சாத் முரடி, மதுசூதன் சாஹா, ரவி யாதவ், முகமது காசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பிரஜைகள் இருவரும் கடந்த 2020ம் ஆண்டு டெல்லி வந்தனர். அவர்களின் விசா காலம் முடிந்தும் நாட்டின் பல பகுதியில் சுற்றித் திரிந்தனர்.

வெளிநாட்டினரை குறிவைத்து ஏமாற்ற வசதியாக, இந்திய அரசின் அடையாள அட்டைகளை போலியாக வாங்கினர். இவர்களுக்கு இந்தியர்கள் சிலர் உதவியுள்ளனர். அதன்பின் ஆன்லைனில் தனியார் கார்களை வாடகைக்கு எடுத்து, அவற்றின் நம்பர் பிளேட்களை மாற்றி, வெளிநாட்டினர் செல்லும் இடங்களை பின்தொடர்ந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்’ என்றார்.

Related Stories: