தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை; 7, 8ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழையும் 7, 8ம் தேதி லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 140 மிமீ, கோவை மேட்டுப்பாளையத்தில் 120 மிமீ, வேதாரண்யம், காயல்பட்டினத்தில் தலா 110 மிமீ மழை பதிவானது.

கடந்த 4 நாட்களில் சென்னையில் 413.1 மிமீ, செங்கல்பட்டில் 290.2 மிமீ, திண்டுக்கலில் 260.6 மிமீ, ஈரோட்டில் 312 மிமீ, காஞ்சிபுரத்தில் 285.6 மிமீ, தேனியில் 232.3 மிமீ, விருதுநகரில் 229.4 மிமீ மழை பதிவானது. இது இயல்பு மழையை விட அதிகமாகும். தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாளை செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: