×

போடி அருகே பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்: ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தேனி : தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் நீர் நிலைகள் நிரம்பின. பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், குடியாறு, பீச்சாங்கரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர் பிள்ளையார் அணை வழியாக வைகை அணையை சென்றடைகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. காவல் துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு, காக்காச்சி, நாலுமூக்கு, மாஞ்சோலை ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1175 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1016 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1772 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணையின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 8-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  


Tags : Bodi , BODIE, HEAVY RAINFALL, RIVERS, FLOODING, PUBLIC WARNING
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்