பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது சென்னை-அந்தமான் இடையே மீண்டும் விமான சேவை: இன்று முதல் தொடங்கியது

மீனம்பாக்கம்: சென்னை-அந்தமானுக்கு இடையே கடந்த 4 நாட்களாக மோசமான வானிலை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அந்தமானுக்கு மீண்டும் விமான சேவை துவங்கியது. அந்தமான் தீவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களாக பராமரிப்பு பணி மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை மற்றும் அந்தமானில் இருந்து இயக்கப்பட்டு வந்த 14 விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களும், அந்தமானில் தங்கியுள்ள தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக விமானத்தில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். அவசர தேவைக்காக மருத்துவ பொருட்கள்கூட எடுத்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது. இந்நிலையில், அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. தற்போது அங்கு சீரான வானிலை நிலவி வருவதாக நேற்றிரவு சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் சென்னை-அந்தமான் இடையே மீண்டும் விமான சேவைகள் துவங்கின. அதிகாலை 4.25 மணியளவில் இன்டிகோ பயணிகள் விமானம் முதலாவதாக அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் ஒரு இண்டிகோ விமானம் என இன்று ஒரே நாளில் 5 விமானங்கள் அந்தமானுக்கு புறப்பட்டு சென்றன.

இதேபோல் அந்தமானில் இருந்து சென்னைக்கு 5 விமானங்கள் வந்தன. மக்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, விமான சேவைகளின் எண்ணிக்கை 14 ஆக உயரும் என சென்னை விமானநிலைய மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: