மகளின் காதலை ஏற்க பெற்றோர் மறுப்பு இன்ஜினியருடன் சென்னை காதலியை போலீசார் அனுப்பி வைத்தனர்

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பெருமணல் பஞ்சலை சேர்ந்த போஸ்கோ மகள் அந்தோணி சபிதா (24). சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த கணேசன் மகன் பார்த்தசாரதி (29) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் பார்த்தசாரதி பணி மாறுதல் காரணமாக மும்பைக்கு சென்று விட்டார். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பணி செய்து வருகிறார். ஆனாலும், செல்போன் மூலம் தனது காதலி அந்தோணி சபிதாவுடன் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தோணி சபிதா தனது ஆதார் கார்டை தனது காதலன் பார்த்தசாரதியின் மும்பை முகவரிக்கு மாற்றினார். இதையறிந்த கொண்ட அவரது பெற்றோர் தனது மகளை சென்னையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்ததனர். தொடர்ந்து அவர்கள், உவரி அருகே உள்ள கூடுதாழையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தனர். இதனை செல்போன் மூலம் அந்தோணி சபிதா தனது காதலன் பார்த்தசாரதிக்கு தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக உவரிக்கு வந்த பார்த்தசாரதி இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், தனது காதலியை அவரது விருப்பமின்றி கூடுதாழையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரேமா கூடுதாழையில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று அந்தோணி சபிதாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சபிதா, தான் பார்த்தசாரதியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மகளின் காதலை ஏற்க பெற்றோர் மறுத்துவிட்டனர். இதையடுத்து மேஜரான சபிதாவின் விருப்பப்படி அவரது காதலன் பார்த்தசாரதியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: