நாமக்கல்லில் மாலை நேர உழவர்சந்தை துவக்கம்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல்லில் மாலை நேர உழவர்சந்தை நேற்று முதல் துவங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உழவர்சந்தைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய 6 ஊர்களில் உழவர்சந்தைகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தினமும் காலை 5 மணிக்கு துவங்கும் உழவர்சந்தைகள், காலை 10 மணி வரை செயல்படும். உழவர்சந்தைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், உழவர் சந்தைகளில் கடைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாமக்கல் உழவர் சந்தைக்கு தினமும் 160 விவசாயிகள் பல்வேறு ஊர்களில் இருந்து அதிகாலையில் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தினமும் சராசரியாக 25 டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் மக்களின் ஆவலை மேலும் பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர உழவர்சந்தைகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று மாலை நேர உழவர்சந்தை துவங்கப்பட்டது. நேற்று 20 விவசாயிகள் சுமார் 1 டன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து வகையான காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.

 

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைகுழு துணை இயக்குனர் நாசர், வேளாண்மை அலுவலர் மல்லிகா, துணை வேளாண்மை அலுவலர் சேகர் ஆகியோர் மாலை நேர உழவர்சந்தையை பார்வையிட்டு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்தனர்.பொதுமக்களும் ஆர்வமாக வந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர். இந்த மாலை நேர உழவர்சந்தை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உழவர் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. பொதுமக்களுக்கு நேரடியாக தரமான காய்கறிகளை விற்பனை செய்வதால் திருப்தி ஏற்படுகிறது. தற்போது மாலை நேர உழவர்சந்தையின் மூலம் காலையில் காய்கறி வாங்க சந்தைக்கு வராத மக்கள், மாலையில் வந்து வாங்கி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

மாலை நேர உழவர்சந்தை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  உழவர்சந்தையில் போதுமான கடைகள் மற்றும் மின் இணைப்பு வசதிகள் இருப்பதால், நாமக்கல்லில் துவங்கப்பட்டுள்ள மாலை நேர உழவர்சந்தைக்கு நேற்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து சென்று காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர்.

Related Stories: