வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுபோல வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா?: இதுவரை முக்கிய ஏரிகள் நிரம்பவில்லை

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத வகையில் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றை ஒட்டியுள்ள வீடுகளை சேதப்படுத்தியது. மேலும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆனால் இந்த ஆண்டு தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் எதிர்பார்த்ததுபோல் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணியான சதுப்பேரி 621 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இது அப்துல்லாபுரம் தொடங்கி கொணவட்டம் வரை வடக்கு கரையையும், கொணவட்டம் தொடங்கி தொரப்பாடி வரை நீளமான எல்லையையும் கொண்டது.

மிகப்பெரிய ஏரியான சதுப்பேரி நிரம்பி வழியும் கடைவாசலில் இருந்து செல்லும் கால்வாய் முள்ளிப்பாளையம் சிறிய ஏரி வரை வந்து அங்கிருந்து நிக்கல்சன் கால்வாய் வரை இணைப்பு கால்வாயும் உள்ளது. கொணவட்டம் பகுதியில் நீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இருப்பினும் இன்னும் சதுப்பேரி நிரம்பவில்லை.  

இதேபோல் ஓட்டேரி ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களும் சீர் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மலைப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து இல்லாதால் ஒருபகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. மற்ற இடங்களில் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. கழிஞ்சூர் ஏரியும் நீர்வரத்து இன்றி உள்ளதால் பெரிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லை. இதேபோல் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் நிரம்பவில்லை. எனவே கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே நீர்நிலைகள் நிரம்பியது. இந்தாண்டு குறைவாக தான் பெய்துள்ளது. இதனால் பெயரளவில் தான் ஏரிகள் நிரம்பி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்குமா? அல்லது குறைவாக இருக்குமா? என்று தெரியவில்லை. எனவே, தற்போது பாலாற்றில் செல்லும் நீரை ஏரிகளுக்கு திருப்பிவிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: