×

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயில் உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பஸ்கள் என எப்போதும் அதிக கூட்டம் வரும் ஸ்தலமாகும்.  

வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் முடி காணிக்கை, சேவல், கோழி ஏலம் மற்றும் உண்டியல் வருமானம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கிறது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதுவும் மறைவான இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் அங்கு யாரும் செல்லாமல் கோயிலின் மேற்கு பகுதியில் இயற்கை உபாதைகளை கழித்து விடுகின்றனர். தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை உள்ளே சென்றாலே கப் அடிக்கிறது என பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். ஊராட்சி சார்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு பராமரிப்பு இல்லாமல் அப்படியே  மூடி கிடக்கிறது.

குடிதண்ணீர் வசதியை பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தால் அலுவலகத்திற்கு பக்கத்தில் வெள்ளிக்கிழமை வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தில் இந்த குடிநீர் வசதி போதிய அளவில் இல்லை. கோயில் தெப்பக்குளம் அருகே சுமார் 1000 அடியில் நல்ல தண்ணீர் உள்ளதாக சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அந்த இடத்தில் போர்வெல் போட்டு கோயிலின் நான்கு புறமும் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால்தான் குடிநீர் பிரச்சினை தீரும். ஊராட்சி சார்பாக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உவர் நீரை குடிநீராக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. ஆனால் அதற்கு தேவையான போர்வெல் அமைக்கப்படவில்லை. இதனால் அதுவும் பயனற்று கிடக்கிறது. போர்வெல் அமைத்து இந்த இயந்திரத்தை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இக்கோயிலை பொறுத்தமட்டில் இரவு தங்கி சாமி கும்பிடுவதை வழக்கமாகவும் சம்பிரதாயமாகவும் வைத்துள்ளனர். பெரும்பான்மையான பக்தர்கள் வியாழன் இரவு வந்து தங்கி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் நீராடி சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் வரை தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கிட கோயில் தென்பகுதி மற்றும் கீழ் பகுதியில் இரண்டு திறந்த வெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்பாக தேவஸ்தானம் சார்பில் 8 தங்கும் அறைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. பல ஆயிரம் பேர் தங்கும் சூழ்நிலையில் வெறும் 8 அறைகள் என்பது போதுமானதாக இல்லை. இரண்டு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு அவை போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. அவற்றை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் மீண்டும் தங்கும் விடுதியும் கூடுதல் தங்கும் அறைகளும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் பகுதியில் சேரும் குப்பைகளை 3 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு போய் கொட்ட வேண்டும். அதற்கு பேட்டரி வண்டிகளோ டிராக்டர் போன்ற வாகனங்கள் எதுவும் இல்லை. எனவே இரண்டு பேட்டரி  குப்பை வண்டிகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்.

சாலையின் இருபுறமும் வீடுகளும் கடைகளும் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை பெய்யும் போது மழை தண்ணீர் ஆகியவை வெளியேற கால்வாய் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே மழை தண்ணீரும் கழிவு நீரும் வெளியேற கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து திருவெற்றியூர் கிராம மக்கள் கூறுகையில், ‘‘மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக போர்வெல் அமைத்து குடி தண்ணீர் வினியோகம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி சார்பில் மூடி கிடக்கும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து சாலையில்  இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னும் கூடுதலான தங்கும் அறைகளும் இடிந்து போன தங்கும் விடுதியை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய தங்கும் விடுதியை கட்ட வேண்டும். இங்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதியை மேம்படுத்த உள்ளாட்சி நிர்வாகமும்
இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளும் தேவஸ்தான நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tiruvettiyur Bagampriyal Temple , Basic facilities should be improved at Tiruvettiyur Bagampriyal Temple: Devotees demand
× RELATED சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க...