×

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி: வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 239 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதூர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டாரங்களில் 172 கிராமங்கள், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 67 கிராமங்கள் என மொத்தம் 239 வழியோர கிராமங்கள் மற்றும் அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சி, மல்லாங்கிணறு, காரியாபட்டி பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்குவதற்கு கடந்த 2008ம் ஆண்டு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வல்லநாட்டில் ராட்சத கிணறுகள் அமைத்து பல்வேறு இடங்களில் தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
 
தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி விளைநிலங்களில் குளம்போல் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தாப்பாத்தியிலிருந்து மேலக்கரந்தை கிராமத்திற்கு இடையில் இருக்கன்குடி அணைக்கட்டு பிரதான கால்வாயின் கரையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. பல முறை செய்த புகாருக்கு பின்னர் குழாய் உடைப்பை சரி செய்ய கால்வாய் கரை மீது குழி தோண்டினர். உடைப்பு சரி செய்துவிட்டு தோண்டப்பட்ட குழியை பல மாதமாகியும் மூடவில்லை. இதனால் கரை வழியாக விவசாய பணியை மேற்கொள்ள டிராக்டர் மற்றும் விவசாயிகள் செல்லமுடியவில்லை.

இவைதவிர முத்துலாபுரம் முதல் அழகாபுரி வரை குழாய் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் புதூர் வட்டாரம் மிட்டா வடமலாபுரம், கந்தசாமிபுரம், இடைச்சூரணி, மேலக்கல்லூரணி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் விநியோகிக்கப்பட வேண்டிய பத்து லட்சம் லிட்டர் குடிநீருக்கு ஐந்து லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் புதூர் வட்டார மக்கள் ஆழ்துளை கிணற்று மாசடைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

அரசு ஒப்பந்த அளவுப்படி குடிநீர் விநியோகம் செய்யாமல் குடிநீர் வடிகால் வாரியம் மாதாமாதம் ஊராட்சிகளில் முழு குடிநீர் கட்டணத்தை வசூலித்து விடுகிறது. உடைப்பை சரிசெய்ய பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் மாற்றுப்பணிக்கு சென்று விட்டனர். இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் முறையான பராமரிப்பின்றி காட்சிப்பொருளாகி விட்டது. இவை தவிர இத்திட்ட அலுவலகம் தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லாமல் விருதுநகர் மாவட்டத்தில் இருப்பதால் பொதுமக்கள் புகாரும் தெரிவிக்க முடியவில்லை.

எனவே அவ்வப்போது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து வீணாகும் தண்ணீரை முறையாக சேமித்து மக்கள் குடிநீருக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Tamirabarani , Tamirabarani Joint Drinking Water Project Waste of water due to broken pipes: Urge to take action
× RELATED தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில்...